மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
கோத்தகிரி : கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில், மாரியம்மன் கோவில் திருவிழா, மிக சிறப்பாக நடந்தது.நேற்று முன்தினம் அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு, கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மனின் திரு வீதி உலா புறப்பாடு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோவிலில் இருந்து புறப்பட்டு, கிராம வீதிகளில் திருவீதி உலா வந்து, பக்கர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் அம்மனுக்கு பூஜை செய்து, காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். தொடர்ந்து, நேர்த்தி கடனாக, முடி காணிக்கை செலுத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆடல், பாடல் மற்றும் பஜனை இடம் பெற்றது. விழாவில் ஒன்னதலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.