| ADDED : ஜூலை 10, 2024 10:04 PM
குன்னுார் : 'மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்பியுள்ள ஊராட்சிகளை, சிற்றுாராட்சி ஆகும் திட்டத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மலை மாவட்டமாக நீலகிரி உள்ளது. தமிழகத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் நீலகிரியில், 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் 35 ஊராட்சிகள் உள்ளன. பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் பேரூராட்சியாக மாற்றப்பட்டுள்ளதால், மத்திய அரசின் திட்டங்கள் உரிய முறையில் பழங்குடி மக்களுக்கு சென்றடைவதில்லை. குறிப்பாக வரிகள் அதிகரித்த போதும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடிக்கிறது.இது தொடர்பாக, குன்னுார் ஒய்.எம்.சி.ஏ., அரங்கில், 'மாவட்ட உள்ளாட்சிகள் மீட்பு இயக்கம்' சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், சென்னை தன்னாட்சி அமைப்பு நிறுவன உறுப்பினர் நந்தகுமார் தலைமை வைத்து பேசுகையில், ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றுவதை கைவிட்டு, தற்போது உள்ள மற்ற பேரூராட்சிகளையும், ஊராட்சிகளாக கொண்டுவர வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்பியுள்ள ஊராட்சிகளை சிற்றுாராட்சிகளாக்கும் திட்டத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.அதிகரட்டி பேரூராட்சி கவுன்சிலர் மனோகரன் பேசுகையில், ''அலுவலர்களின் பணி பாதுகாப்புக்காக தான் பேரூராட்சிகள் செயல்படுவதாக உள்ளது. மக்களின் கூடுதல் வரி வசூல் செய்து செலவழிக்கும் அமைப்புகளாகவே பேரூராட்சிகள் உள்ளன. எனவே, பேரூராட்சிகளை ஊராட்சிகளாக மாற்ற வேண்டும்,'' என்றார்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளை சிற்றுாராட்சிகளாக மாற்றுவதன் அவசியம் குறித்து கெங்கரை ஊராட்சி தலைவர் முருகன் பேசினார். சுப்ரமணியன், ராஜேஷ், வள்ளி ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். ஆல்தொரை நன்றி கூறினார்.