| ADDED : மே 16, 2024 02:28 AM
ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், மே 10ம் தேதி துவங்கிய மலர் கண்காட்சி, இம்மாதம், 20ம் தேதி நிறைவடைகிறது. மலர் கண்காட்சியை ஒட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் கட்டணம், பெரியவர்களுக்கு, 150, சிறியவர்களுக்கு, 75 ரூபாய் என நிர்ணயித்துள்ளனர். 'மலர் கண்காட்சியை ரசிக்க வந்த சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்கள் கட்டணம் அதிகம்' என, அதிருப்தி தெரிவித்தனர். மலர் கண்காட்சியை துவக்கி வைக்க ஊட்டிக்கு வந்த, தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக, அவர் தெரிவித்தார். இந்நிலையில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலை உதவி இயக்குனர் பால சங்கர் கூறுகையில், ''மலர் கண்காட்சியை ஒட்டி தாவரவியல் பூங்காவில், பெரியர்களுக்கான கட்டணம், 150 ரூபாய் வசூலிக்கப்பட்டது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். தற்போது, பெரியவர்களுக்கான கட்டணம், 125 ரூபாயாக குறைக்கப்பட்டது,'' என்றார்.