உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குழந்தை இறப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை பெற்றோர் தர்ணாவால் பரபரப்பு

குழந்தை இறப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை பெற்றோர் தர்ணாவால் பரபரப்பு

ஊட்டி, ; 'குழந்தையின் இறப்பு விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பெற்றோர் தர்ணா வால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட குண்டாட பிரிவு எம்.ஜி.ஆர். , நகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி கலைச்செல்வி இவர்களுக்கு ஜஸ்வின் என்ற 10 மாத குழந்தை இருந்தது.அந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த கடந்த ஆண்டு நவ ., மாதம், 13ம் தேதி கோத்தகிரி அருகே குடுமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தினர். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. பெற்றோர் உடனடியாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இதயத்துடிப்பு குறைவாக இருப்பதாக கூறியதை அடுத்து , மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின் , குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் இறப்பு தொடர்பாக சமீபத்தில் வெளியான அறிக்கையில், 'குழந்தையின் இறப்பிற்கு தடுப்பூசி அலர்ஜி காரணமாக இருக்கலாம்,' என, கூறப்பட்டுள்ளது. இதை அறிந்த பெற்றோர் தடுப்பூசி செலுத்தியதால் தான் எங்களது குழந்தை இறந்து விட்டதாக குற்றம் சாட்டினர். மேலும், 'இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, வலியுறுத்திய குழந்தையின் பெற்றோர், நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் வந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வைத்து, அனுப்பி வைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை