குன்னுார் : குன்னுாரில் பேரிக்காய் சீசன் துவங்கிய போதும் குரங்கு, காட்டெருமை, கரடிகள் நாசம் செய்வதால் பேரிக்காய் விவசாயம் அழிவின் பிடியில் உள்ளது.குன்னுார், கோத்தகிரி, ஊட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆண்டு தோறும், ஜூன், ஜூலை, ஆக., மாதங்களில், பேரிக்காய் சீசன் களை கட்டும். அதில், சாம்பல் பேரி, வால் பேரி, கத்தி பேரி உட்பட 10 வகையான பேரிக்காய்களை, விவசாயிகள், சாகுபடி செய்கின்றனர்.இதே போல, குன்னுார் பழ பண்ணையிலும் பேரி விளைவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, பேரி காய்ப்பது குறைந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு நள்தோறும், 2 டன் முதல் 4 டன் வரை விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட பேரிக்காய், தற்போது கூடைகளில் வைத்து விற்பனை செய்யும் அளவிற்கு குறைந்துள்ளது.குரங்கு, காட்டெருமை, கரடி உள்ளிட்டவை பேரிக்காய்களை உட்கொண்டு சேதம் செய்து வருவது அதிகரித்து வருவதால் பலரும் விவசாயம் மேற்கொள்வதில்லை.இதே போல, குன்னுார் பழ பண்ணையிலும் காட்டெருமை, கரடிகள் புகுந்து நாசம் செய்வதால் இங்கும் பேரிக்காய்கள் விளைச்சல் குறைந்து விட்டது. விவசாயிகள் கூறுகையில், 'நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் உட்பட சில இடங்களில் மட்டுமே பேரிக்காய் விளைவிக்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே விளைச்சல் உள்ள நிலையில் வனவிலங்குகள், கடந்த சில ஆண்டுகளாக வவ்வால்களும் வந்து பேரியை உட்கொண்டு வருகின்றன. இதற்கு தோட்டக்கலை சார்பில் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. குன்னுார் பகுதிகளில் பழங்கள் சாகுபடி செய்ய ஊக்குவிப்பதுடன் வனவிலங்குகளிடம் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டிய திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்,'' என்றனர்.