உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூளை ஆரோக்கியமாக இருக்க தினமும் படிக்க வேண்டும்

மூளை ஆரோக்கியமாக இருக்க தினமும் படிக்க வேண்டும்

மேட்டுப்பாளையம்;உடல் ஆரோக்கியமாக இருக்க, உடற்பயிற்சி செய்கிறோம். அதுபோல மனித மூளை ஆரோக்கியமாக இருக்க, புத்தகங்கள் வாசிக்க வேண்டும்.அப்போதுதான் முதிர்வு காலம் வரை மூளை நல்ல செயல்பாட்டில் இருக்கும், என, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழா வரவேற்பு குழுவும் இணைந்து, கல்வி வளர்ச்சிநாள் விழா, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, புத்தகம் வாங்க சேமிப்பு உண்டியல் வழங்கும் விழாக்கள், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கலையரங்கில் நடந்தது. விழாவிற்கு மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமை வகித்தார். புத்தகத் திருவிழா வரவேற்பு குழு செயலாளர் மஸ்தான் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் முகமது பாதுஷா அறிமுக உரை ஆற்றினார். ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிய கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பேசியதாவது: மாணவர்களிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. எனவே ஏதாவது ஒரு புத்தகத்தை, மாணவர்கள் முழுவதுமாக படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கட்டாயப்படுத்த வேண்டும்.புத்தகங்கள் நிறைய படிப்பதால் பொது அறிவு வளர்வதோடு, புதிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்கிறோம்.அது போல மூளை ஆரோக்கியமாக இருக்க, தினமும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் முதிர்வு காலம் வரை, மூளை நல்ல செயல்பாட்டில் இருக்கும். எனவே ஆசிரியர்கள் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பேசினர். விழாவில் மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா உள்பட புத்தக திருவிழா வரவேற்பு குழு நிர்வாகிகள், ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் பங்கேற்றனர். இவ்விழாவில், 16 தனியார் பள்ளி மற்றும் 13 அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ