| ADDED : ஆக 01, 2024 12:00 AM
ஊட்டி : வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில், 360 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மீட்பு பணயில் ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள, கேரளாவுக்கு தமிழ்நாடு, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு கமாண்டர் கிஷோர் குமார் தலைமையில், ஒரு குழுவில், 30 பேர் என, 12 குழு நேற்று வயநாடு விரைந்தது. கமாண்டர் கிஷோர் குமார் கூறுகையில், ''அரக்கோணத்திலிருந்து, 12 குழுவில், 360 பேர் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டோம். அங்குள்ள பாறை இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்பதில் கடும் சிரமத்துடன் மீட்டோம். 30 உடல்கள், சில செல்ல பிராணிகள் மீட்டோம். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது,'' என்றார்.