பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணி பயணிகள் நிம்மதி
கோத்தகிரி:கோத்தகிரி பஸ் நிலையத்தில் கான்ரீட் தளத்தை சீரமைக்கும் பணி நடந்தது.கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், பத்துக்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சமவெளி மற்றும் உள்ளூர் கிராமங்களுக்கு பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை, நாள்தோறும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நெரிசல் மிகுந்த பஸ் நிலையத்தில் கான்ரீட் தளம் பெயர்ந்து, கம்பிகள் நீட்டியவாறு இருந்தது. இதனால், பயணிகள் குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தடுக்கி விழுந்து, காயம் ஏற்பட்ட நிலை நீடித்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தை ஆய்வு செய்து, உடனடியாக, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். பயணிகள் நிம்மதி அடைந்தனர்.