உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிமிக்கான தடை நீட்டிப்பு தீர்ப்பாய கூட்டம் துவக்கம்

சிமிக்கான தடை நீட்டிப்பு தீர்ப்பாய கூட்டம் துவக்கம்

குன்னுார்:'சிமி' அமைப்பு தடை நீட்டிப்பு தொடர்பான, சட்ட விரோத தடுப்பு தீர்ப்பாய கூட்டம் குன்னுாரில் துவங்கியது.1977ம் ஆண்டு ஏப்., மாதம் உத்தரபிரதேசம் மாநிலத்தில், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமி என்ற அமைப்பு துவங்கியது. 1980ல் இருந்து பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு, பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா மற்றும் இந்தியன் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் சிமிக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், 2001ம் ஆண்டில் சிமி அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இது தொடர்பாக, நாடு முழுதும் பல்வேறு இடங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னுார் நகராட்சி அலுவலகத்தில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் கூட்டம், டில்லி ஐகோர்ட் நீதிபதி புருசைந்திரகுமார் கவுரவ் தலைமையிலான துவங்கியது.முன்னதாக, அவருக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை, அவர் ஏற்று கொண்டார். கூட்டம் துவங்கியதும், 'சிமி தடை நீட்டிப்பு தொடர்பான சாட்சியம் அளிப்பவர்கள் உறுதிமொழி பத்திரங்களை பதிவாளர் ஜித்தேந்திர பிரதாப் சிங்கிடம் வழங்கலாம்' என, தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பாய கூட்டத்தில், மத்திய, மாநில அரசு வக்கீல்கள் பங்கேற்று உள்ளனர். நேற்று மதியம் வரை நடந்த விசாரணையில் யாரும் பங்கேற்கவில்லை. இன்று, 19ம் தேதி காலை விசாரணை நடந்த பின்பு, நிறைவு பெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்