மாநில விளையாட்டு போட்டி: பள்ளி மாணவர்கள் தேர்வு
கூடலுார் : பள்ளிகளுக்கு இடையே, மாநில அளவில் நடைபெறும் கால்பந்து, கூடைப்பந்து போட்டியில் விளையாட, கூடலுார் தேவர்சோலை ஹோலிகிராஸ் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.குன்னுார் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித் துறை சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.அதில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து இறுதிப்போட்டியில், கூடலுார் தேவர்சோலை ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்; குன்னுார் புனித ஜோசப் பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்று, மாநில அளவில் விளையாட தேர்வு பெற்றனர்.அதேபோன்று, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில், இப்பள்ளி மாணவர்கள் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவில் விளையாட தேர்வு பெற்றனர்.மாநில அளவில் விளையாட தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்கள் உகாஷ், தினேஷ் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி நிஷா மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.