| ADDED : ஜூன் 05, 2024 09:54 PM
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது அங்குள்ள கேமராவில் பதிவாகியதால், வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்களை ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்கா மேல்புறத்தை ஒட்டி வனப்பகுதி உள்ளது. வனத்திலிருந்து வெளியேறும் காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரங்களில் பூங்கா பகுதிக்கு வந்து சுற்றித்திரிகின்றன. சில சமயத்தில் பகல் நேரத்திலேயே உலா வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூங்கா நுழைவு வாயில் பகுதியில், அரிய கருஞ்சிறுத்தை ஒன்று அங்கும் இங்குமாக சுற்றித்திரிவது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலசங்கர் கூறுகையில்,''தாவரவியல் பூங்காவுக்கு அவ்வப்போது இரவு நேரங்களில் வன விலங்குகள் வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கருஞ்சிறுத்தை ஒன்று பூங்கா நுழைவு பகுதியில் சுற்றித்திரிவது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. வனத்துறையினர் அங்கு வந்து ஆய்வு செய்தனர். பூங்காவுக்கு வன விலங்குகள் நுழையாமல் இருக்க தேவையான கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.