மலையேற்றம் செல்ல தற்காலிக தடை; மீறினால் நடவடிக்கை நிச்சயம்
கூடலுார்; கூடலுாரில் கோடை வறட்சியில் ஏற்படும் வனத்தீ உட்பட பிற பிரச்னைகளை தவிர்க்க, மலையேற்றம் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில், 14 மாவட்டங்களில் 40 வழித்தடங்களை அடிப்படையாக வைத்து, 'தமிழக மலையேற்றம் திட்டம்' கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், கூடலுார் ஜீன்பூல் தாவர மையம், ஊசிமலை (கரியன்சோலை) உள்ளிட்ட, 10 மலையேற்றம் வழித்தடங்களில், மலையேற்ற பயணத்துக்கு அனுமதித்து உள்ளனர்.அதில், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையத்தில் உள்ள மலையேற்ற வழிதடத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலையேற்றம் சென்றுவர அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த வாரம் வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட,120 பேர் மலையேற்றம் சென்று வந்துள்ளனர். இந்நிலையில், வறட்சி, வனத்தீ அச்சம் காரணமாக, கோடையில் மலையேற்றம் செல்ல வனத்துறை, ஏப்.15 வரை தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'தற்போது கோடை காலம் என்பதால் வறட்சி மற்றும் வனத்தீ ஆபத்தை கருத்தில் கொண்டு, மலையேற்றம் பயிற்சிக்கு,தற்காலிக தடை விதித்துள்ளனர். இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.