| ADDED : ஏப் 22, 2024 11:10 PM
ஊட்டி:பதிவான ஓட்டுபெட்டிகளை எடுத்து செல்ல வாகனங்கள் வருவதற்கு தாமதமானதால் ஊழியர்கள் விடிய, விடிய காத்திருந்து அவதி அடைந்தனர். நீலகிரி லோக்சபா தொகுதியில், ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் மலை மாவட்டத்தில் உள்ளன. தேர்தலுக்காக, 689 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. மூன்று தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஓட்டு சாவடி அலுவலர்கள், ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் உட் பட பிற பணிகளில், 3,391 பேர் சுழற்சி முறையில் பணியில் இருந்தனர்.கடந்த, 18ம் தேதி தேர்தல் பணியாக காலையில் புறப்பட்டு ஊழியர்கள் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்ட 'ஸ்ட்ராங்' ரூமிலிருந்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு சாவடிக்கு ஊழியர்கள் எடுத்து சென்றனர். அங்கு ஓட்டு சாவடி மையங்களை தயார்படுத்தினர். 19ம் தேதி காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு, மாலை, 6:00 மணிக்கு முடிவடைந்தது. முடிவுற்ற மின்னணு இயந்திரங்களை ' சீல்' வைத்து ஒப்படைக்க தயார் நிலையில் வைத்தனர்.40 சதவீதம் ஓட்டு சாவடி மையங்களில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை நள்ளிரவிலும், அதிகாலை நேரங்கள் என, தாமதமாக எடுத்துள்ளனர். மின்னணு ஓட்டு பெட்டிகளை ஒப்படைக்க வாகனத்திற்காக விடிய விடிய ஊழியர்கள் தூக்கமின்றி காத்திருந்தனர். குறிப்பாக தேர்தல் பணிக்கு வந்த பெண் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தேர்தல் பணி ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில்,'தேர்தல் பணி என்பதால், 18 ம் தேதி காலையிலேயே ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டு சாவடி மையத்திற்கு சென்றனர்.ஓட்டு பதிவு முடிந்ததும், 5 மணி நேரம் இடைவெளியில், 70 சதவீதம் ஓட்டு சாவடி மையங்களிலிருந்து பதிவான ஓட்டு பெட்டிகள் ஜோனல் அதிகாரியிடம் ஒப்படைத்து போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகிறது. இம்முறை சரியான முறையில் திட்டமிடாததால் பெரும்பாலான ஓட்டு சாவடி மையங்களில் ஊழியர்கள் ஓட்டு பெட்டியை ஒப்படைக்க விடிய, விடிய காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.மன உளைச்சலுக்கு ஆளாகினர். சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது,' என்றனர்