| ADDED : மார் 28, 2024 11:30 PM
பந்தலுார்;பந்தலுார் மற்றும் உப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு, மைசூர் மற்றும் நெலக்கோட்டை, தேவர்சோலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. தமிழக--கேரளா இணைப்பு சாலையாக இருந்தபோதும், இதனை அகலபடுத்தி சீரமைப்பதில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.மிகவும் குறுகலான இந்த சாலையில் வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பகுதி மக்கள் மருத்துவ தேவைகளுக்கு, கேரள மாநிலம் செல்லும் நிலையில், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த சாலையின் பல இடங்களிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் குழிகள் மற்றும் சாலையோரங்கள் இடிந்து காணப்படுகிறது.பெக்கி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே செல்லும் கால்வாய் உடைந்து, வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கிறது. இந்த பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டால், தமிழக- -கேரள போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும். எனவே இந்த சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.