பந்தலுார்;கேரள மனித கழிவுவை, தமிழக எல்லையில் உள்ள பந்தலுார் நீரோடை அருகே கொட்டும் செயல் தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதில் இழுபறி தொடர்கிறது.கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 'செப்டிக் டாங்க் கிளீனிங் சர்வீஸ்' எனும் பெயரில், தனியார் சார்பில் டாங்கர் லாரி இயக்கப்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளில் முறையான அனுமதி பெற்று, அதற்கான, 'ரூட் சார்ட்' பெற வேண்டும். அதில், நீலகிரி எல்லைக்குள் அகற்றப்படும் மனித கழிவுகளை, ஊட்டியில் உள்ள கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி கொடுக்க வேண்டும்.ஆனால், இந்த குழுவினர் எந்தவித அனுமதியும் பெறாமல், நீலகிரியில் மட்டுமின்றி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளிலும் மனித கழிவுகளை சேகரித்து, பந்தலுார் சுற்றுவட்டார பகுதி வனம் மற்றும் நீரோடை பகுதிகளில், இரவு நேரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால், வனப்பகுதிகளும், வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு, நீரோடை மற்றும் ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்தும், பொதுமக்களும் பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சோதனை சாவடிகளிலும் இது போன்ற லாரிகளை ஆய்வு செய்யாமல், தமிழக எல்லைக்குள் அனுமதிப்பது தொடர்கிறது.இந்நிலையில், பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில், சப்பந்தோடு என்ற இடத்தில் நீரோடையை ஒட்டிய வனப்பகுதியில், கேரளாவில் சேகரித்த மனித கழிவுகளை, கொட்டிய போது பொதுமக்களால் லாரி சிறைபிடிக்கப்பட்டு, போலீஸ் மற்றும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊராட்சி, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நிலையில், அதனை செலுத்த மறுத்ததால், லாரியை வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். ஆனால், ஒட்டு எண்ணிக்கை பணிக்கு அதிகாரிகள் சென்றதால், இது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. பொது மக்கள் கூறுகையில்,''பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அதில், தவறு செய்த டாங்கர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்,'' என்றார்.