குன்னுார்;'குன்னுார் தாலுகாவில் உள்ள கேத்தி பேரூராட்சி உட்பட ஐந்து ஊராட்சிகளை இணைத்து ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக விரிவாக்கம் செய்ய கூடாது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.குன்னுார் தாலுகாவில் கேத்தி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சி உட்பட தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார் மற்றும் உல்லத்திஆகிய ஊராட்சிகளை இணைத்து ஊட்டி நகராட்சியை விரிவாக்கம் செய்து, மாநகராட்சியாக அறிவிக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், 'ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்தில் பேரூராட்சி; ஊராட்சிகள் இணைப்பை கைவிட வேண்டும்,' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கூடுதல் வரிசுமை ஏற்படும்
'லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு,' ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது : நீலகிரி மாவட்டத்தில் தரம் இல்லாத பேரூராட்சிகளை ஊராட்சிகளாக மாற்ற வேண்டும். அரசின் நிதி முழுமையாக கிடைக்க வழி வகை செய்ய, பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர், தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் மேலுார் உட்பட பல பேரூராட்சிகள் ஊராட்சிகளாக மாற்றப்பட்டன. அதில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் பஞ்சாயத்து, பேரூராட்சிகளாக மாற்றப்படுகிறது. அந்த பஞ்சாயத்துக்களில் பெரிய எஸ்டேட் நிறுவனங்களின் மூலம் மட்டுமே இது போன்ற வருமானம் கிடைக்கிறது. ஆனால், அங்கு ஏழை தொழிலாளர்கள், பழங்குடியினர் அதிகம் உள்ளதால் அவர்களுக்கும் கூடுதல் வரி சுமைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் மக்கள் வரி செலுத்துவது அதிகரிக்கும். பழங்குடியினர், ஏழை தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் ஜல்ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் எதுவும் கிடைக்காது. எனவே, ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைப்பதை கைவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.