| ADDED : ஜூன் 03, 2024 12:50 AM
ஊட்டி;ஊட்டி ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அடிக்கடி மழை நீரில் மூழ்குவதால், போலீசார் பரிதவிக்கும் அவலம் நீடிக்கிறது. ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகில், மலை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையம் துவங்கிய நாள்முதல், அருகில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. சற்று தாழ்வான பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ள நிலையில், கன மழை காலத்தில் தண்ணீர் வெளியேறாத சூழ்நிலை உள்ளது. இதனால், மழைநீரில் ஆவணங்கள் நனைந்து சேதமடைவதுடன், போலீசார் டேபிள்கள் மேல் அமர வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், ஊட்டியில் பெய்த கன மழையின் போது, ரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால், படகு இல்லம் செல்லும் சுற்றுலா வாகனங்களும் அவ்வழியாக செல்லும் டவுன் பஸ்கள் உட்பட, இதர வாகனங்கள் தண்ணீரில் சிக்கின. மூன்று மணிநேரம் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அப்போது, அங்குள்ள போலீஸ் ஸ்டேனை மழைநீர் சூழ்ந்ததால், போலீசார் வெளியேற முடியாமல் பரிதவித்தனர்.இப்பகுதி மக்கள் கூறுகையில்,''கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை மேடான பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.