| ADDED : ஜூன் 05, 2024 09:48 PM
மேட்டுப்பாளையம் : நகராட்சி அண்ணா மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும், காலி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. மேட்டுப்பாளையம் நகராட்சி பங்களா மேடு பகுதியில், அண்ணாஜி ராவ் சாலையில், நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா தினசரி மார்க்கெட் உள்ளது. இக் கட்டடம் மிகவும் பழுதடைந்து இருப்பதால், இக்கட்டடத்தினை இடித்து விட்டு, புதிதாக தினசரி மார்க்கெட் கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.நகராட்சி நிர்வாகத்தால் தற்போது, தமிழக அரசு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 4.40 கோடி ரூபாய் செலவில், அண்ணா மார்க்கெட் செயல்பட்ட இடத்தில், தினசரி மார்க்கெட் கடைகள் கட்டப்பட உள்ளன. அதனால் தற்போதுள்ள கடை உரிமதாரர்கள், கடைகளை காலி செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்தால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பலமுறை அறிவிப்புகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வேண்டி உள்ளதால், காலம் தாழ்த்துவதை தவிர்த்து, 30ம் தேதி அண்ணா தினசரி மார்க்கெட் கடை உரிமதாரர்கள் கடைகளை காலி செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.கடை உரிமதாரர்கள் மூன்றாம் தேதி, கடைகளை காலி செய்து விடுகிறோம் என கூறினர். இதை அடுத்து அண்ணா தினசரி மார்க்கெட்டில் உள்ள 20 கடை உரிமதாரர்கள், கடைகளை காலி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.