ஊட்டியில் கஞ்சா விற்பனை மூன்று வாலிபர்கள் கைது
ஊட்டி , ; ஊட்டியில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களின் எல்லையில், நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஊட்டி ஜி-1 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் ஹரிஹரன், நிஷாந்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது , ஒரு கிலோ கஞ்சாவும், 100 கிராம் 'ஹைட்ரோபோனிக்' என்ற வேதி பொருள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், கேரளா மாநிலம் காளம் பூலாவை சேர்ந்த அப்துல்வகாப்,34, ஊட்டி வண்டி சோலையை சேர்ந்த சுஜன்,35, காட்டேரி உலிக்கல் பகுதியை சேர்ந்த மெல்சர்பால்,35, ஆகியோர் என்பது தெரிய வந்தது. போலீசார் மூவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.