உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிக்மி எண் பெற முடியாமல் கர்ப்பிணி தவிப்பு

பிக்மி எண் பெற முடியாமல் கர்ப்பிணி தவிப்பு

மேட்டுப்பாளையம் : 'பிக்மி' எண் பெறமுடியாமல் கர்ப்பிணி ஒருவர் தவித்து வருகிறார். 'பிக்மி' எண் இல்லை என்றால், பிறக்கும் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற இயலாது.தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கர்ப்பிணிகள் 'பிக்மி' எனப்படும் தாய் - சேய் நல அடையாள அட்டையின் எண் பெற வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் தாய் சேய் நல கவனிப்புகள் அனைத்தும் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கர்ப்பிணிகள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் கர்ப்ப கால விவரங்களை பதிவு செய்து, 'பிக்மி' அடையாள அட்டையை பெறலாம். 'பிக்மி' எண் இருந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். சிறுமுகை அருகே மூடுதுறை கிராமம் மீனம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சூரியா, 21. இவரது கணவர் ரூபேஸ் 24, பீகாரை சேர்ந்தவர். கூலி வேலை செய்து வருகிறார். சூரியாவின் தந்தை சண்முகம், தாய் செல்வி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சூரியாவுக்கு ஒரு அண்ணன், 3 மூத்த சகோதரிகள் உள்ளன.சூரியா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கும், இவரது பெற்றோர் என யாருக்குமே ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை போன்ற எந்த ஆவணமும் இல்லை. சூரியா 6ம் வகுப்பு வரை மீனம்பாளையம் அரசு பள்ளியில் படித்துள்ளார். ஆகையால் பள்ளியின் டி.சி. சான்று மட்டுமே உள்ளது. சூரியாவுக்கு எந்த ஆவணமும் இல்லாததால் இவருக்கு 'பிக்மி' எண் வழங்க முடியவில்லை. இதனால் இவருக்கு பிறக்க போகும் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க முடியாத நிலை உள்ளது.அரசு துறை அதிகாரிகள் இவருக்கு ஆதார் அட்டை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டும், இவரிடம் எந்த ஆவணமும் இல்லாததால் ஆதார் அட்டை எடுக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனிடையே நேற்று மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஆதார் கார்டு எடுக்கும் மையத்திற்கு வந்த சூரியா, ஆதார் கார்டு எடுக்க, மூடுதுறை கிராம பஞ்சாயத்து கடித்தத்துடன் வந்தார். ஆனால் அதை வைத்தும் ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை. தனக்கு பிக்மி எண் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.இதுகுறித்து சூரியா கூறுகையில், எனக்கு சொந்த ஊர் வேளாங்கண்ணி. மூடுதுறை கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்து 20 வருடங்கள் ஆகிறது. எனது பெற்றோர் இடம் பெயரும் போது எந்த ஆவணமும் எடுத்து வரவில்லை. இங்கு வந்தும் எந்த ஆவணமும் எடுக்கவில்லை. பெற்றோருக்கு இல்லாததால் எனக்கும் ஆவணங்கள் எடுக்க முடியவில்லை. தற்போது 'பிக்மி' எண் கட்டாயம் வேண்டும் என்கிறார்கள். என்ன செய்வது என தெரியவில்லை. ஆதார் கார்டு கிடைக்க வழிவகை செய்து தர வேண்டும், என்றார்.இந்த விவரம் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், மற்றும் நகராட்சி அதிகாரிகள், சூரியாவுக்கு உதவ முன் வந்து, உயர் அதிகாரிகளுடன் அவருக்கு 'பிக்மி' எண் பெற ஆலோசனை மேற்கொண்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சூரியா மிகவும் அப்பாவி பெண். நகராட்சி பகுதியில் அவர் வசிக்கவில்லை என்றாலும், அவருக்கு உதவ முடிவு செய்துள்ளோம். உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டோம். அவருக்கு ஆதார் கார்டு எடுக்க வழிகாட்டப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை