| ADDED : ஏப் 12, 2024 01:15 AM
பாலக்காடு:பாலக்காடு அருகே, காட்டு யானை கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் மோதியதில் பெண் யானைக்கு காலில் காயம் ஏற்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா கொட்டேக்காடு அருகே, பாலக்காடு- - கோவை ரயில் பாதை குறுக்கிடுகிறது. இங்கு, நேற்று முன்தினம் அதிகாலை வனத்தில் இருந்து வந்த காட்டு யானை கூட்டம், குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டது.இந்நிலையில், அதிகாலை, 3:00 மணி அளவில் கொட்டேக்காடு ரயில் நிலையம் அருகே புதரில் இருந்து வந்த காட்டு யானை கூட்டம், வனத்தினுள் செல்ல ரயில் தண்டவாளத்தை கடந்து சென்றது. அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த சரக்கு ரயிலில் ஒரு யானை அடிபட்டது. இதில் ஒரு பெண் யானையின் காலில் காயம் ஏற்பட்டது.அதன்பின், காயமடைந்த யானை காட்டு யானை கூட்டத்துடன், வனத்துக்குள் சென்றது. ரயில் வேகத்தை குறைத்து மெதுவாக வந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஒரு யானைக்கு சிறு காயம் ஏற்பட்ட தகவலை, ரயில்வே அதிகாரிகள் வன துறையிடம் தெரிவித்தனர்.கோட்ட வன அலுவலர் ஜோசப்தாமஸ் தலைமையிலான வனத்துறையினர், காட்டு யானை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து, வனத்துறையின் தலைமை கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் கூறுகையில், ''யானையின் பின் காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. யானையின் நகர்வை கண்காணித்து வருகிறோம். தேவை என்றால் தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்,'' என்றார்.