| ADDED : ஜூன் 18, 2024 11:15 PM
பாலக்காடு:பாலக்காடு அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவத்தில், பண்ணை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் பனமண்ணை பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணனின் மனைவி பாறுக்குட்டி, 60. இவர், கறவை மாடு பண்ணை நடத்தி வந்தார். நேற்று முன்தினர் காலை, கூட்டுறவு சொசைட்டியில் பால் வழங்குவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை.இதையடுத்து, உறவினர்களும், பொதுமக்களும் இணைந்து, பாறுக்குட்டியை தேடினர். அப்போது, இரவு, 10:30 மணி அளவில் அதே பகுதியில் உள்ள கோழிப் பண்ணை அருகே மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.தகவல் அறிந்த ஒற்றைப்பாலம் எஸ்.ஐ.. ஜயபிரதீபன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்ட போது, கோழிப்பண்ணை உரிமையாளர் சிவதாஸ், 58, என்பவர், நாய்கள் மற்றும் காட்டு பன்றிகளுக்கு அமைத்த மின் பொறியில், பாறுக்குட்டி சிக்கி இறந்தது தெரியவந்தது.இதையடுத்து, சிவதாஸ் மற்றும் கோழி பண்ணையில் பணி புரியும் ஆசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் அலி, 31, ஆகியோரை கைது செய்தனர்.