உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில் 13,050 மனுக்கள்; பரிசீலனை பணிகளை துரிதப்படுத்த அறிவுரை

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில் 13,050 மனுக்கள்; பரிசீலனை பணிகளை துரிதப்படுத்த அறிவுரை

ஊட்டி; நீலகிரியில், வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில், 13 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்., 29ம் தேதி வெளியிடப்பட்டது. 2025ம் ஆண்டு ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்; பெயர் நீக்குதல், பிழை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு நவ., 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. தவிர, மூன்று தொகுதிகளிலும் உள்ள, 690 ஓட்டு சாவடிகளில் கடந்த நவ., மாதம் நான்கு நாட்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடந்தது. இந்த சிறப்பு முகாமில்,'வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பிற்கு, 6,677 மனுக்கள்; நீக்கத்திற்கு, 1587 மனுக்கள்; முகவரி மாற்றத்திற்கு, 4786 மனுக்கள்,' என, மொத்தம், 13,050 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் உரிய ஆய்வு செய்யப்பட்டு பெயர் சேர்ப்பு, நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜன., மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

ஊட்டியில் ஆய்வு கூட்டம்

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம், 2025 பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், ஊட்டி தமிழக விருந்தினர் மாளிகையில் நடந்தது. கூட்டத்தில், மத்திய தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து பங்கேற்று, நீலகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள்; அவற்றை தீர்வு செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆலோசனை வழங்கி, பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.கூட்டத்தில், கலெக்டர் லட்சுமிபவ்யா, எஸ்.பி., நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வாக்காளர் பதிவு அலுவலர்களான, குன்னுார் சப்-கலெக்டர் சங்கீதா, ஆர்.டி.ஓ.,க்கள் செந்தில்குமார், சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ