உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுற்றுலா பயணியர் பயன்படுத்தாததால் மாவட்டத்தில் 38 வாட்டர் ஏ.டி.எம்.,கள் அகற்றம்!

சுற்றுலா பயணியர் பயன்படுத்தாததால் மாவட்டத்தில் 38 வாட்டர் ஏ.டி.எம்.,கள் அகற்றம்!

பந்தலூர்: நீலகிரியில் சில பகுதிகளில் உடைந்து காணப்படும் வாட்டர் ஏ.டி.எம்.,களில் சுற்றுலா பயணியர் பயன்படுத்த அச்சமடைவதால், மாவட்ட முழுவதும், 38 வாட்டர் ஏ.டி.எம்.,கள் அகற்றப்பட்டு வருகிறது. மலை மாவட்டமான நீலகிரியில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உட்பட, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த, 2019 ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், குடிநீர் எடுத்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக, மாவட்ட நிர்வாகம் வாயிலாக சுற்றுலா தலம், நெடுஞ்சாலையோரம், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், 66 வாட்டர் ஏ. டி.எம்., இயந்திரங்கள் நிறுவப்பட்டது. ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் பராமரித்து வருகின்றனர்.

38 வாட்டர் ஏ.டி.எம்., கள் அகற்றம்

ஆனால், சுத்திகரிப்பு செய்யாமலும், பராமரிப்பின்றி இருந்த காரணங்களால் தண்ணீரை சுற்றுலா பயணியர், பொதுமக்கள், பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தனர். இந்த இயந்திரங்களை பராமரிப்பு செய்யாமல் விட்டதாலும், வாட்டர் ஏ. டி. எம் ., இயந்திரங்கள் பயனில்லாமல் பாழடைந்து வந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத, 38 தானியங்கி குடிநீர் இயந்திரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி வாயிலாக ஏலம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த உள்ளாட்சி துறை அதிகாரிகள் முன்னிலையில் பயன்படாத வாட்டர் ஏ.டி.எம்., கள் அகற்றப்பட்டு வருகிறது. இதில், பயன்படுத்திய தண்ணீர் தொட்டியினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும். என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சாலை ஓரங்களில் பயனில்லாமல், பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறாக; காணப்பட்ட வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரங்கள் அகற்றப்பட்டு வருவதை மக்கள் வரவேற்றுள்ளனர்.

திடீர் ஆய்வு அவசியம்!-

பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் குறிப்பாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணியர் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் குறிப்பிட்ட பகுதிகளில் வாட்டர் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. இதை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் போதிய அக்கறை காட்டாததால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, பயன்பாட்டில் உள்ள, 28 வாட்டர் ஏ.டி.எம்.,களை உள்ளாட்சி அமைப்புகள் சரிவர பராமரிக்கின்றனரா என்பதை மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும்.என, வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ