மாவட்டத்தில் 24 மையங்களில் தேர்வு 6,335 மாணவர்கள் பங்கேற்பு 6,335 மாணவர்கள் பங்கேற்பு
ஊட்டி,; இன்று நடக்கும் குரூப்-4 தேர்வில், நீலகிரி மாவட்ட, 24 மையங்களில், 6,335 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-4) பதவிகளுக்கான தேர்வு இன்று காலை, 8:30 மணி முதல், 12:30 மணிவரை நடக்கிறது.ஊட்டி வட்டத்தில், '7 தேர்வு மையங்களில், 2,199; குன்னுார் வட்டத்தில், 4 மையங்களில்,1,086; கூடலுாரில், 5 மையங்களில், 1435; கோத்தகிரியில், 4 மையங்களில், 789; குந்தாவில் ஒரு மையத்தில், 183; பந்தலுாரில், 3 மையங்களில், 643,' என, மொத்தம், 24 மையங்களில், 6,335 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஆறு பறக்கும் படைகள்
தேர்வினை கண்காணிக்க மாவட்டத்தில், மொத்தம், 6 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல துணை வட்டாட்சியர் நிலையில், மொத்தம், 14 'மொபைல் யூனிட்' மற்றும் தேர்வு கூடங்களில், தேர்வினை கண்காணிக்க சம்மந்தப்பட்ட பள்ளி கல்லுாரி உதவியாளர் நிலையில், மொத்தம், 24 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்விற்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாற்று திறனாளிகளுக்கு தேர்வு கூடங்களில் கீழ்த்தளத்தில் தேர்வு எழுதத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் நேரம்
தவிர, தேர்வு எழுத வரும் பார்வையற்றோர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு அறை ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, தேர்வு நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது.தேர்வு எழுத வருபவர்கள் ஆள் மாறாட்டம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வு கூடங்களுக்கு, மொபைல் போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கை கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துசெல்ல அனுமதி இல்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.