பந்தலுார் : பந்தலுார் அருகே விபத்தில் உயிரிழந்த நண்பன் குடும்பத்துக்கு வகுப்பு தோழர்கள் உதவி கரம் நீட்டி உள்ளனர். பந்தலுார் அருகே புஞ்சைகொல்லி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி,50. இவர் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில், ஜன.,மாதம் 15 ஆம் தேதி, மழவன் சேரம்பாடி என்ற இடத்தில், சாலையோர மின்கம்பத்தில் பஸ் மோதியதில், பஸ்சில் மின்சாரம் பாய்ந்தது.அதில், பயணம் செய்த பாலாஜி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பாலாஜி குடும்பத்தை மட்டும் இன்றி, நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பாலாஜியின் மனைவி தினசரி வேலைக்கு செல்வதுடன், இரண்டு பெண் குழந்தைகள் கல்லுாரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களின் வகுப்பு தோழர், விபத்தில் உயிரிழந்த நிலையில், பாலாஜியுடன் படித்த, வகுப்பு தோழர்கள் இணைந்து அவரின் குடும்பத்திற்கு ஏதேனும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர்.அதனை தொடர்ந்து அவர்கள் சேகரித்த, 50 ஆயிரம் ரூபாய் பணத்திற்கான காசோலையை, பாலாஜி மனைவி தினமணியிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன் ஒருங்கிணைப்பாளர்கள் அகிலேஷ், மதுசூதனன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் முன்னிலையில் காசோலை வழங்கப்பட்டது.மேலும், தொடர்ந்து குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தனர். அத்துடன், அரசு சார்பில் விபத்தில் உயிரிழந்த பாலாஜி குடும்பத்திற்கு, 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் கூறுகையில், ' இரு பெண்கள் கல்வி தொடர அரசு உதவி செய்ய வேண்டும்; பாலாஜியின் மனைவி கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,' என்றனர்.