உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்ட அறிக்கை தயார்! குன்னுார், கூடலுாரில் புதிய விற்பனை நிலையம்

மலையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்ட அறிக்கை தயார்! குன்னுார், கூடலுாரில் புதிய விற்பனை நிலையம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, 2.25 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைகாய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. தேயிலை தோட்டங்களுக்கு இடையே ஊடுபயிராகவும் பல காய்கறிகள் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், மாவட்டநிர்வாகம் நீலகிரியின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், அனைத்து துறைகள் ஒருங்கிணைப்புடன் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுத்து, கடந்த, 2018ம் ஆண்டு முதல் நீலகிரி இயற்கை விவசாயம் மாவட்டமாக அறிவித்தது. அதற்கான பணிகளை தோட்டக்கலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்வத்துடன் விவசாயிகள் களம்

நீலகிரி இயற்கை விவசாயமாக அறிவிக்கப்பட்டு, 6 ஆண்டுகள் ஆன நிலையில், தோட்டக்கலை துறை கணக்கெடுப்பு படி, 1200 விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை விவசாய திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை விவசாயம் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாயில் இயற்கை விவசாயம் சார்ந்த இடுபொருட்களை மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தில் உள்ள பல்வேறு திட்டங்களை தோட்டக்கலை துறையினர் கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

விரைவில் விற்பனை நிலையம்

இயற்கை முறையில் விளைவிக்கும் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இப்பகுதிகளில், விற்பனை நிலையம் இல்லாததால், இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளை நாடி சென்று விளை பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில், இயற்கைவிவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதன் முறையாக ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலை துறை வளாகத்தில், புதிய விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.வாரத்தில் திங்கட்கிழமை இயற்கை விவசாயத்தில் விளைவித்த பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தவும், விளைவிக்கப்பட்ட மலை காய்கறிகளை சந்தைப்படுத்த விரைவில் குன்னுார், கூடலுார் விற்பனை நிலையம் அமைக்க தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ரூ. 2.25 கோடிக்கு திட்ட அறிக்கை

இயற்கை விவசாய குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரன் கூறுகையில்,''நீலகிரியில் இயற்கை விவசாயத்தை படிப்படியாக ஊக்குவித்து வருகிறோம். இதுவரை மாவட்டத்தில், 1200 பேர் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதில், 2.19 கோடி ரூபாய்க்கு நிதி வந்ததில் பல்வேறு இயற்கை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, 2.25 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளோம். நிதி வந்ததும் இயற்கை சார்ந்த பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். குன்னுார், கூடலுாரில் இயற்கை சார்ந்த விளைபொருட்கள் விற்பனை செய்ய விரைவில் விற்பனை நிலையம் அமைக்கப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை