யு.பி.எஸ்.சி., தேர்வில் கூடலுாரை சேர்ந்த பெண் தேர்ச்சி
கூடலுார்; மத்திய அரசின் குடிமை பணிக்கான யு.பி.எஸ்.சி., தேர்வில் கூடலுாரை சேர்ந்த, முன்னாள் தாசில்தாரின் மகள் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.மத்திய அரசின் குடிமை பணிக்கான யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம், வெளியிட்டது. அதில், 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த தேர்வில், கூடலுார் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும், சவுந்தர்யா, என்பவர், தேர்ச்சி பெற்று நீலகிரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.இவர், பி.ஈ., பயோ மெடிக்கல் படித்துவிட்டு, 4வது முயற்சியில் தேர்ச்சி பெற்ற இவர், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர். இவரின் தந்தை முத்து தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தாயார் பெயர் கீதா. சவுந்தர்யா கூறுகையில் ''கல்லுாரியில் படிக்கும்போது, குடிமைபணிக்கான யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்று, பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.பெற்றோரின் முழு ஒத்துழைப்புடன், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளேன். பணியில் சேர்ந்த பின் மீண்டும் யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.