இறுதி பட்டியல் செம்மையாக வெளியிட ஒத்துழைப்பு அவசியம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுரை
ஊட்டி: 'இறுதி வாக்காளர் பட்டியல் செம்மையாக வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என, நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்தார். ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் சிறப்பு சுருக்க முறை திருத்தம்- 2025, தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். இதில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் - 2025 தொடர்பாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஒத்துழைப்பு தர வேண்டும்
கூட்டத்தில், நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் பேசியதாவது: நாட்டின் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் செம்மையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நீலகிரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இங்கு, இம்மாதம், 16, 17, மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில், 3 தொகுதிகளில் உள்ள, 690 ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது. அதில், ஆர்.டி.ஓ., தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இம்மாதம், 28ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை, 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிடவும், திருத்தங்கள் இருப்பின் அதனை சரி செய்து கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தலில் குறைவான ஓட்டுப் பதிவுகளான ஓட்டுச் சாவடி இடங்களில் தேவையான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் செம்மையாக வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.