யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏ.ஐ கேமராக்கள்: முதன்மை வனப்பாதுகாவலர் தகவல்
ஊட்டி: 'யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய, 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடலுார் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் தாக்கி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் குறையவில்லை. இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழக முதன்மை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா நிருபர்களிடம் கூறியதாவது: கூடலுார் பகுதியில் யானைகளை கண்காணிக்க, 54 முன்னெச்சரிக்கை கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எனினும் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதனை கண்காணிக்க, 'ஏ.ஐ' தொழில் நுட்பத்துடன் கூடிய, 12 கண்காணிப்பு கேமராக்கள் இப்பகுதிகளில் பொருத்தப்பட உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் யானைகளின் நடமாட்டத்தை அதன் உடல் வெப்பத்தை பதிவு செய்து முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும். இது தவிர, யானை விரட்டும் பணியில் தற்போது, 92 பணியாளர்கள் உள்ள நிலையில், கூடுதலாக, 12 பேர் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், பலாப்பழம் சீசன் காலமான ஜூன் மாதம் முதல் செப்., மாதம் வரை யானைகளின் நடமாட்டம் மக்கள் வாழும் பகுதிகளில் அதிகமாக உள்ள நிலையில், அவைகளை கண்காணிக்க கூடுதலாக, 40 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க தகவல் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையங்கள் தற்போது, 12 இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்படும். யானை விரட்டும் பணிகளில் உள்ளூர் இளைஞர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். அவர்கள் மொபைல் போன்களின் வாயிலாக யானைகளின் நடமாட்டத்தை பொதுமக்களுக்கு உடனடியாக தெரிவிப்பர். வனத்துறையில் தற்போது, 90 சதவீதம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். வரும் காலங்களில் மனித விலங்கு மோதல் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வனப்பகுதியில் தனியார் சார்பில் தேன் எடுப்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கபப்டும். இவ்வாறு அவர் கூறினார்.