குன்னுாரில் அனுமதியின்றி பிரம்மாண்ட கட்டடங்கள் ஆய்வுக்கு பிறகே கட்டுமானம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு
குன்னுார், ; குன்னுார் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சுசீலா தலைமையில் நடந்தது.கமிஷனர் இளம்பரிதி முன்னிலை வகித்தார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் மற்றும் போப், குமரி அனந்தன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த விவாதம்:கவுன்சிலர் ஜாகிர் : எஸ்.ஏ. பி.பி., திட்டம் குறித்து நகராட்சி கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை. இது குறித்து தகவல் அளிக்க வேண்டும். வார்டில் தெருவிளக்கு எரிவதில்லை.துணை தலைவர் வாசிம் ராஜா : திட்ட விபரம், தபாலில் வீடுகளுக்கு அனுப்பலாம்.கமிஷனர் இளம்பரிதி : புதிதாக, 200 விளக்குகள் கேட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பழைய விளக்குகள் எரியாதது தொடர்பாக டெண்டர் எடுத்தவரிடம் பேசி தீர்வு காணப்படும். ஜெகநாதன் : அயோத்திய தாஸ் பண்டித திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் வசிக்கும் இடங்களில் நிதி ஒதுக்க வேண்டும். கமிஷனர் : இத்திட்டத்தின் கீழ்,10 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி கேட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை முன்மாதிரியாக எடுத்து மாவட்ட கலெக்டர் மற்ற நகராட்சிகளிலும் செயல்படுத்த கேட்டுக் கொண்டார்.கவுன்சிலர்கள் ஜாகிர், ராஜேந்திரன், ஜெகநாதன், உமாராணி, ராஜ்குமார்: தரமிலாத பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் நாராயண மூர்த்தி, முனாப் ஆகியோர், பிளாக் லிஸ்ட்டில் வைத்து தீர்மானம் நிறைவேற்றியும், அவர்களுக்கே டெண்டர் கொடுக்கப்படுகிறது. நகராட்சி விதி, 163 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமசாமி, சாந்தா, மணி: நகராட்சியில் சாதாரண மக்கள் அனுமதி பெற்று வீடுகள் கட்ட முடியாமல் திணறி வரும் நிலையில் பிரம்மாண்ட கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள் தொடர்பான நகராட்சி அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்ட பிறகே பிரம்மாண்டமாக பணிகள் நடக்கிறது.ரங்கராஜன், மணி, ஜாகிர்: உழவர் சந்தை அருகே கடை பணிக்கு, 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்கள் நிற்க கூட முடியாத வகையில் உள்ள கடைகளுக்கு வியாபாரிகள் செல்ல மாட்டார்கள். பார்க்கிங் உட்பட காலி இடம், குண்டம் இறங்கும் இடங்களில் கடைகள் மாற்றி, வழங்கலாம். கமிஷனர் : கடை மாற்றுவதற்கு, ஐ.யு.டி.பி. பகுதியில் பணிகள் மேற்கொள்ளும் போது கட்டுமான பொருட்கள் கொண்டு வருவதற்கு பாதிப்பு ஏற்படும். அறநிலைய துறை, தீயணைப்பு துறை இடங்களில் தற்போது கடைகள் அமைக்க அனுமதி இல்லை.