ராணுவ அருங்காட்சியகம்; என்.சி.சி., மாணவியர் பிரமிப்பு
குன்னுார்; நீலகிரியில், நடந்து வரும் தேசிய என்.சி.சி. மாணவியர் மலையேற்ற பயிற்சி முகாமில், வெலிங்டன் ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மாணவியர் பிரமிப்படைந்தனர்.நீலகிரி மாவட்டத்தில், தேசிய அளவிலான என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி முகாம், முத்தொரை பாலாடாவில் உள்ள ஏகலைவா ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில், துவங்கி நடந்து வருகிறது.இதில், 3வது குழுவில், 110 மாணவியர் பங்கேற்ற குழுவின் மலையேற்றத்தை, கோவை மாவட்ட குழு கமாண்டர் கர்னல் ராமநாதன் துவக்கி வைத்தார். இந்த குழுவினர், ஊட்டி, குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் மலையேற்ற பயிற்சியை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த குழுவினர், குன்னுார் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி மையம், ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். அதில், போர்ச் சின்னங்கள், பாதுகாப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளின் விவரங்களை அறிந்து வியப்படைந்தனர். என்.சி.சி., கேம்ப் கமாண்டன்ட் கர்னல் தீபக், கேம்ப் துணை கமாண்டன்ட் லெப். கர்னல் கார்த்திக் மோகன், ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் பாதுகாப்பு அலுவலர் மேஜர் மன்ஜித் கோர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.