ஊட்டி; நீலகிரியில் மழை பொய்த்து எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வற்றியதால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு, இத்தலார், முள்ளிகூர் ஆகிய மூன்று ஊராட்சிகள் மற்றும் குன்னுார் நகராட்சி, 'பாஸ்டியர் இன்ஸ்டிடியூட்' உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தவிர, எமரால்டு அணையிலிருந்து குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லுார் மின்நிலையம் வரை மின் உற்பத்திக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது, குந்தா மின் வாரிய குடியிருப்புக்கும் இங்கிருந்து தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. வினியோகம் நிறுத்தம்
கடந்தாண்டு மழை பொய்த்ததால் எமரால்டு அணையின் மொத்த அடியான, 184 அடியில் தற்போது தண்ணீர் படிப்படியாக குறைந்து அதல பாதாளத்திற்கு சென்றது. நடப்பாண்டில், ஏப்., மாதமாகியும் இன்னும் எதிர்பார்த்த அளவு கோடை மழை பெய்யவில்லை. தண்ணீர் பஞ்சத்தால் குந்தா வட்டத்தில் உள்ள மின்நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தை நம்பியுள்ள நஞ்சநாடு, இத்தலார், முள்ளிகூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் குன்னுார் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டது. கடந்த பல ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட வறட்சியால் ஏமரால்டு பகுதிகளில் உள்ள அணைகள், நீர்பிடிப்பு பகுதிகள், குளம் குட்டைகள் அனைத்தும் வரலாறு காணாத அளவுக்கு வற்றியுள்ளது. கிராம மக்கள் கூறுகையில், 'எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி வந்தோம், மழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் ஆங்காங்கே உள்ள ஊற்று நீரை தேடி குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.ஊராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.