கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி; ஊட்டியில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஆஷா' பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமை வகித்தார். இ.கம்யூ., கட்சி மாநில குழு உறுப்பினர் பெள்ளி பங்கேற்று பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், 'மத்திய அரசு வழங்கும் மாதம், 5,750 ரூபாயுடன் மாநில அரசின் பங்கையும் சேர்த்து மாதம், 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்க வேண்டும்; சுகாதாரத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்க வேண்டும்; அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போல ஆஷா பணியாளர்களுக்கும் ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும்; ஆஷா பணியாளர்களின் சீருடை மாற்றி தர வேண்டும்; காலதாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்ட, 7 மாத ஊதிய நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.அதில், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் போஜராஜ், மாவட்ட இணை செயலாளர் முகமது கனி, ஆஷா பணியாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி., சங்க தலைவர் ஆரி, இணை செயலாளர் லீனா உட்பட பலர் பங்கேற்றனர்.