| ADDED : ஜன 31, 2024 10:14 PM
பந்தலுார் : பந்தலுார் வங்கியில் ஊழியர்கள் குறைவான காரணத்தால், நாள்தோறும் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பந்தலுாரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாக, இந்தியன் வங்கி மட்டுமே செயல்பட்டு வருகிறது. இங்கு, 'தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் மாணவர்கள்,' என, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்.வங்கியில் பணியாற்ற ஏழு ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது மேலாளர் மற்றும் உதவி மேலாளர் மட்டுமே பணியில் உள்ளனர். நாள்தோறும் வங்கிக்கு பல்வேறு தேவைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி மேலாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழலில், வயது முதிர்ந்த பென்ஷன் வாங்க வரும் வயோதிகர்கள் சோர்வடைந்து விழும் நிலையும் ஏற்படுகிறது. குழந்தைகளுடன் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மருத்துவம் மற்றும் கல்லுாரி உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு பணம் அனுப்ப வரும் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.வங்கியில் போதிய ஊழியர்களை பணியில் அமர்த்த, வாடிக்கையாளர்கள் பலமுறை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட வங்கியின் உயர் அதிகாரிகள் வரை மனுக்கள் கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை. தற்போது இரண்டு பேர் பணியாற்றும் நிலையில் பணியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம் பந்தலுார் இந்தியன் வங்கிக்கு தேவையான ஊழியர்களை பணியில் அமர்த்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இல்லாவிட்டால் தினசரி வங்கி நிர்வாகத்தினர் மற்றும் வாடிக்கையாளர் இடையே ஏற்படும் பிரச்னைகள் அதிகரிக்கும் நிலை தொடரும்,' என்றார்.முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் கூறுகையில்,'' இந்த பிரச்னை குறித்து, இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்துக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் பற்றாக்குறை குறித்து மீண்டும் நினைவூட்டப்படும்,'' என்றார்.