மளிகை கடை கதவை உடைத்து மிட்டாய்களை உட்கொண்ட கரடி
குன்னுார்; குன்னுார் கேட்டில் பவுண்டு சாலையில் உள்ள மளிகை கடையில் கதவுகளை உடைத்து மிட்டாய்களை உட்கொண்டு சென்ற கரடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு தேடி வரும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெலிங்டன் கேட்டில் பவுண்டு சாலை ஓரத்தில் உள்ள கணேசன் என்பவரின் மளிகை கடைக்கு நேற்று காலை, 6:22 மணியளவில் வந்த கரடி கதவுகளை உடைத்து மிட்டாய்களை கொண்டு சென்றது. இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. வனத்துறையினர் கூறுகையில், 'வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே இங்குள்ள கடைகளை கரடி உடைத்துள்ளது. கதவுகளில் பாதுகாப்பு வசதிகள் அதிகப்படுத்த வேண்டும்,' என்றனர்.