சேதமடைந்த சாலையோரம் சீரமைத்தால் பயன்
கூடலுார்: கூடலுார் புளியம்பாறை அருகே, தடுப்பு சுவர் இடிந்து, சேதமடைந்துள்ள சாலையோரத்தை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்.கூடலுார் மரப்பாலம் பகுதியில் இருந்து புளியம்பாறைக்கு இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. இரு மாதங்களுக்கு முன், இச்சாலையில் வளைவான பகுதியை, தனியார் பள்ளி வாகனம் கடந்து சென்றபோது சாலையோரத்தில் ஏற்பட்ட வெடிப்பில், வாகனத்தின் முன் டயர் சிக்கி, தடுப்பு சுவர் சேதமடைந்து மண்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சேதமடைந்த பகுதியில், மணல் மூட்டை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். எனினும், தொடரும் மழையில் அப்பகுதி மேலும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க, அப்பகுதியை நிரந்தரமாக சீரமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கிராம மக்கள் கூறுகையில்,'புளியம்பாறை கிராமத்தில் வசித்து வரும் மக்கள், போக்குவரத்துக்கு இச்சாலையை நம்பி உள்ளனர். இச்சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டால், இங்கு உற்பத்தியாகும் பசுந்தேயிலை, காய்கறி உள்ளிட்ட விவசாய விளை பொருள்களை எடுத்து செல்லவும், மாணவர்கள், பொதுமக்கள் வெளியூர் சென்று வர சிரமம் ஏற்படும். எனவே, சேதம் அடைந்த பகுதியை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.