சிம்ஸ்பூங்காவில் தயாராகும் போன்சாய் மரங்கள்: கிறிஸ்துமஸ்க்கு காட்சிப்படுத்த முடிவு
குன்னுார்: குன்னுார் சிம்ஸ் பூங்கா நர்சரியில் முதல் முறையாக, போன்சாய் மரங்கள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டுள்ளது; கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சுற்றுலா பயணிகள் பார்வையிட காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 1200 அரிய வகை மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும், 50 ஆண்டுகள் முதல் நுாற்றாண்டு பழமை வாய்ந்தவை. 1874ல் பூங்கா துவங்குவ தற்கு முன்பு, 1869ல் நடவு செய்யப்பட்ட நுாற் றாண்டு பழமை வாய்ந்த கற்பூர மரம் தற்போதும் கம்பீரமாக உள்ளது. மேலும், 'ருத்ராட்சம், பேப்பர் பார்க், டர்பன்டைன், எலிபேன்ட், லெக்டரி, கேம்பர், ஸ்டராபெரி, மேப்பிள், புக் லேண்டியா,' உட்பட பல அரிய வகை மரங்களும் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது. இந்நிலையில், முதல் முறையாக, நர்சரியில்,போன்சாய் என அழைக்கப்படும் ஜப்பான் குட்டை ரக மரங்கள் மற்றும் செடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில்,''சிக்கிம் மாநிலத்தில் இருந்து, 4 ஆண்டு பழமையான நாற்றுக்கள் வரவழைக்கப்பட்டு, இங்குள்ள தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. முதற்கட்டமாக சாம்பிராணி, பைன், பாக்ஸ் வு ட், ஆகியவை வளர்க்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, பாட்டில் பிரஷ், ஜெல்லி புஷ், ஜேட் பிளாண்ட், பவுடர் பப் உள்ளிட்டவை போன்சாய் மரங்களாக வளர்க்கப்பட உள்ளது. வரும் கிறிஸ்துமஸ் புத்தாண்டுக்கு சுற்றுலா பயணிகள் பார்வையிட, கண்ணாடி தொட்டியில் காட்சிப் படுத்தப்படும். ஜப்பானியர் இதனை ஒரு கலையாக எடுத்து வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்,'' என்றார்.