தோட்ட பயிர்கள் வாரியத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிப்பு! மலை விவசாயிகள், வர்த்தகர்கள் பயன் பெற வாய்ப்பு
குன்னுார்; தேயிலை, காபி, ரப்பர், வாசனை திரவியங்கள் உட்பட தோட்ட பயிர்களுக்கு, மத்திய பட்ஜெட்டில் அதிக ஒதுக்கீடு செய்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 1893ல் தென்னகத்தின் தேயிலை உட்பட தோட்ட பயிர்களுக்காக ஐக்கிய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி) துவங்கப்பட்டு, தற்போதும் செயல்பட்டு வருகிறது.இங்கு தென் மாநிலங்களில், தேயிலை, காபி, ரப்பர், மிளகு மற்றும் பிற பயிர்களை பயிரிடுபவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. மேலும், விவசாயிகளின் நலன்கள், தோட்ட தொழிலாளர்களின் வேலை, சம்பளம் மற்றும் சலுகைகளை மேம்படுத்துவதில் இந்த சங்கம் முக்கிய பங்காற்றி வருகிறது.தோட்ட பயிர்களுக்கான துறை நிலையானதாகவும், லாபகரமாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பிற பங்குதாரர்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.தோட்ட தொழில் துறையில் நலன்களை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசுடன் பணியாற்றி, தொழில் நடைமுறைகளை ஊக்குவித்து, விவசாயிகளின் நலன்களுக்காக வாதிட்டு வருகிறது. 'உபாசி' அமைப்பில், தோட்டப்பயிர்கள் மற்றும் தொடர்புடைய தொழில்களை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதே போல, இந்திய தேயிலை வாரியம், குன்னுாரில் செயல்பட்டு வருகிறது. வரவேற்பை பெற்ற பட்ஜெட்
ஆண்டுதோறும் பட்ஜெட்டில், மத்திய அரசு, தோட்ட பயிர்கள் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து, தொழில்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.கடந்த, மூன்று நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த, 2025--26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தோட்ட பயர்கள் வாரியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். அதில், கடந்த ஆண்டை விட, இந்த பட்ஜெட்டில், தேயிலை, காபி, ரப்பர், வாசனை திரவிய வாரியங்களுக்கு, சற்று அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. தேயிலை வாரியத்துக்கு அதிகம்
தேயிலை தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும், தேயிலை வாரியத்திற்கு அதிகபட்சமாக, 771.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.இது கடந்த பட்ஜெட் ஒதுக்கீடான, 721.50 கோடி ரூபாயை விட, 6.94 சதவீதம் அதிகமாகும். காபி வாரியத்திற்கு, முந்தைய ஆண்டை போலவே, 2025--26 நிதியாண்டில், 280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ரப்பர் வாரியத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு, 360.31 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட, 348.38 கோடி ரூபாயை விட, 12.6 சதவீதம் அதிகமாகும்.2025-- 26ம் ஆண்டிற்கான, வாசனை திரவிய வாரியத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு, 153.81 கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட, 130 கோடி ரூபாயை விட, 18 சதவீதம் அதிகமாகும். இதனால், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பயன் ஏற்பட வாய்ப்புள்ளது.'உபாசி' செயலாளர் சஞ்சித் கூறுகையில்,''கடந்த பட்ஜெட்டை விட, இந்த பட்ஜெட்டில், 'மார்ஜினல்' அளவு உயர்த்தி, சற்று அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது,'' என்றார்.