அரசு உயர்நிலை பள்ளியில் செஸ் போட்டி :மாணவர்கள் அசத்தல்
கூடலுார்; கூடலுார் மாரக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகளை, பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகோபால் துவக்கி வைத்தார். ஜூனியர், சீனியர் என. இரண்டு பிரிவுகளில் போட்டி நடந்தது. ஜூனியர் பிரிவில் முதல் மூன்று இடங்களை பஹத் (6ம் வகுப்பு), கீர்த்திகா (8ம் வகுப்பு), கிருதிக் (6ம் வகுப்பு) பெற்றனர். சீனியர் பிரிவில் மூன்று இடங்களை முஸ்மில் (10ம் வகுப்பு), அம்பிரியா கதிஜா, அப்துல் பாயஸ் (9ம் வகுப்பு) பெற்றனர். வென்றவர்களுக்கு பரிசு வழங்கி ஆசிரியர்கள் பேசுகையில்,' உலகளவில் செஸ் போட்டியில் நம் மாநில வீரர்கள் தொடர் சாதனைகளை புரிந்து வருகின்றனர். அதுபோல, நம் மாணவர்களும் சாதனை புரியும் வகையில், இந்த விளையாட்டை ஆர்வத்துடன் கற்று பல்வேறு சாதனைகள் புரிந்து, பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்,' என்றனர். ஏற்பாடுகளை, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம், 'ஆல் தி சில்ட்ரன் பவுண்டேஷன்' ஒருங்கிணைப்பாளர் அஜித், என்.ஐ.ஐ.டி., பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ், ஆசிரியர்கள் பிரபு சங்கர், மங்கையர்கரசி ஆகியோர் செய்திருந்தனர்.