ஊட்டியில் சி.ஐ.டி.யு. கவன ஈர்ப்பு போராட்டம்
ஊட்டி; 'ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் காலதாமதம் செய்யாமல் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்,' என, வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரே சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் சார்பில் நடந்த கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு, 'ஸ்டெர்லிங் பயோடெக்' சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன், மூத்த நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் செந்தில் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் கூறுகையில், 'தொழிலாளர் உதவி ஆணையரின் முழு ஊதியம் வழங்கும் உத்தரவை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும். காலதாமதம் செய்யாமல் தொழிலாளர்கள் கோரிக்கையை ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் நிறைவேற்ற வேண்டும்,' என்றனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.