காலநிலை மாற்றம் விரைவாக நடந்து வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி கருத்தரங்கில் கருத்து
கோத்தகிரி ;ஊட்டி அருகே உள்ள காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், காலநிலை மாற்றம் குறித்து, சிறப்பு கருத்தரங்கு நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:அரசு, அனைத்து பள்ளிகளிலும் காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என, சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது. பெரும்பாலான மக்களுக்கும், மாணவர்களுக்கும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. விஞ்ஞானிகளின் கணிப்பைவிட, காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாகவும், விரைவாகவும் நடந்து வருகிறது. இத்தகைய சூழலில், அரசின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், மரங்கள் நடுவதும், காடுகளின் அடர்த்தியை அதிகரிப்பதும், பசுமை பரப்பை விரிவாக்குவதும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். குறிப்பாக, உணவு உற்பத்தியில் நவீன அறிவியல் முறைகளை புகுத்த வேண்டும். குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, சத்துள்ள உணவு பொருட்களை தயாரிப்பது நவீன அறிவியல் முறையில் சாத்தியமாகும்.நிலக்கரியின் பயன்பாட்டை படிப்படியாக குறைப்பதுடன், வாகனங்கள் அனைத்தும், பசுமை வாகனங்களாக மாற்றப்பட வேண்டும். பொதுமக்களும் தங்களது பங்கிற்காக, ஆடம்பர வாழ்க்கையையும், நுகர்வு வெறியையும் இந்த பூமிக்காக தியாகம் செய்ய வேண்டும். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே நேரத்தில், சுற்றுச்சூழல் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதன் மூலம், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார். ஆசிரியை பவித்ரா வரவேற்றார். ஆசிரியை அமினா நன்றி கூறினார்.