மானிய விலையில் துணி பை! நீலகிரி ரேஷன் கடைகளில் வழங்கினால் பெரும் பயன்; மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம்
குன்னுார், : 'நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில், மானிய விலையில் துணி பைகள் விற்க நடவடிக்கை எடுத்தால், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் 'பிளாஸ்டிக்' தடை செய்த மாவட்டமாக மாற்றப்பட்டு, 50 மைக்ரான் கீழுள்ள பிளாஸ்டிக் கவர்கள், குடிநீர் பாட்டில் உட்பட, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கு மாற்று பொருட்கள் பயன்பாடு என்பது சரியாக அமையாமல் உள்ளதால், துணி பைகள் அதிக விலையில் உள்ளதால், மக்கள் மீண்டும் பிளாஸ்டிக் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.'தெர்மாகோல்' போன்று, கடல் நுரைகள் வாயிலாக தயாரிக்கப்படும் பைகளும், மட்குவதில்லை; அதிக எடையையும் தாங்குவதில்லை. பேப்பர் பைகள், மழை காலங்களில் கிழிந்து விடுகிறது. ஊட்டியில் மட்டும் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் பொருத்தப்பட்ட நிலையில், அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அமைக்கவில்லை. இதனால், குறைந்த விலையில் துணிப்பைகள் கிடைக்க, அரசு தக்க நடவடிக்கை எடுத்தால் மாவட்ட மக்களுக்கு பெரும் பயன் ஏற்படும்.கூடலுார் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,''அரசு சார்பில் துணி பைகள் தயாரித்து அவற்றை, 'ரேஷன் கடைகள், கூட்டுறவு சிறப்பங்காடி, கூட்டுறவு முதல்வர் மருந்தகங்கள், அமுதம் அங்காடி,' என, 500க்கும் மேற்பட்ட இடங்களில் விற்பனை செய்ய முடியும். நீலகிரியில், மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில், பள்ளி சீருடைகள் தைத்து பெறுவது போல், காடா துணிகள் மொத்தமாக கொள்முதல் செய்து, அதில் துணி பைகள் தைத்து விற்பனை செய்தால், குறைந்த விலையில் பைகள் பெற்று விற்பனை செய்யலாம். மகளிருக்கு கடனுதவிகள் வழங்கி பைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் துவக்கலாம். நீலகிரியில், பல மகளிருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். வெவ்வேறு அளவுகளில் துணி பைகள் தைத்து, அளவுகேற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யலாம். மகளிர் திட்டம், கூட்டுறவு துறை இணைந்து இதனை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.