மேலும் செய்திகள்
ஒப்பந்ததாரர்களுக்கு தொகை சதீஷ் ஜார்கிஹோளி உறுதி
06-Mar-2025
பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சியில், ஒப்பந்தாரர்கள் இடையே, நிலவும் பனிப்போரால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளது. தலைவராக பழங்குடி இனத்தை சேர்ந்த சிவகாமி என்பவர் உள்ளார். பெரும்பான்மை தி.மு.க., கவுன்சிலர்களை உள்ளடக்கிய, இந்த நகராட்சி பொறுப்பேற்ற முதல் ஒப்பந்த பணியில் நடக்கும் பனிப்போரால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர இயலாத நிலையில் உள்ளது. இந்நிலையில், ஒரு கோடி ரூபய் மதிப்பீட்டில், 21 பணிகளுக்கான டெண்டர் மூன்று முறை விடப்பட்டும், ஒப்பந்ததாரர்கள் இடையிலான பனிப்போரால் ரத்து செய்யப்பட்டு வருகிறது. நகராட்சியில், 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ள நிலையில், ஏற்கனவே, 52 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, அந்தப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு, தற்போதைய, 21 பணிகள் வழங்க வேண்டுமென பேச்சுவார்த்தை செய்யப்பட்டிருந்தது.ஆனால், ஏற்கனவே டெண்டரில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள், தற்போதைய டெண்டரிலும் பங்கேற்றதுடன், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு கூடுதலான பணிகள் வேண்டுமென பிரச்னை எழுப்பி உள்ளனர். இதனால், மூன்றாவது முறையாக டெண்டர் ரத்து செய்யப்பட்டதால், மக்களுக்கு தேவையான நடைபாதை, தடுப்பு சுவர், கால்வாய் மற்றும் அங்கன்வாடி கட்டடங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ள இயலாத நிலை உருவாகி உள்ளது. கவுன்சிலர்களும் இது குறித்து பெரிதாக கண்டு கொள்ளாததுடன், சில கவுன்சிலர்கள் ஒப்பந்ததாரர்களாக உள்ளதால் பிரச்னைக்கு தீர்வு காண முடியாத நிலை உருவாகி உள்ளது. பருவமழை துவங்க உள்ள நிலையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை நிறைவேற்ற முடியாத சூழலில், இவர்களின் பனிப்போரால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சில வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.நகராட்சி கமிஷனர் முனியப்பன் கூறுகையில், ''ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால், டெண்டர் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே இது குறித்து உரிய பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
06-Mar-2025