இலவச வீட்டு மனை பட்டா கிளன்மார்கன் மக்கள் மனு உரிய நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு
ஊட்டி ;ஊட்டி அருகே, கிளன்மார்கன் பகுதி மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.ஊட்டி அருகே கிளன்மார்கன் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சரிவான பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பருவமழை, பலத்த காற்று வீசும் சமயங்களில் அச்சத்துடன் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 'அப்பகுதி மக்கள் மாற்றிடம் ஒதுக்கி, இலவச வீட்டு மனை தர வேண்டும்,'என, சம்பந்தப்பட்ட வருவாய் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் மாற்றிடம் ஒதுக்கி இலவச வீட்டு மனை பட்டா கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். 'மனு குறித்து சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கலெக்டர் உத்தரவிட்டார். அப்பகுதி மக்கள் கூறுகையில்,'கிளன்மார்கன் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம். சரிவான பகுதியில் வீடுகள் இருப்பதால் எந்நேரத்திலும் நிலச்சரிவு அபாயம் உள்ளது. 'மாற்றிடம் ஒதுக்கி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்,' என்றனர்.