உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போக்குவரத்து மேலாண்மை திட்டத்தில் குழப்பம்; அணிவகுத்து நின்ற வாகனங்களால் சுற்றுலா பயணியர் அவதி

போக்குவரத்து மேலாண்மை திட்டத்தில் குழப்பம்; அணிவகுத்து நின்ற வாகனங்களால் சுற்றுலா பயணியர் அவதி

ஊட்டி; ஊட்டியில் சுற்றுலா பயணிகள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், தற்போது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.நேற்று, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர். அங்குள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். இதேபோல், ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

இதனால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது. கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி- -குன்னுார் சாலையில், 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.சுற்றுலா பயணிகள் பிற சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கூடலுாரில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும், பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு மாற்றி விட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சேரங்கிராஸ் பகுதியில் குழப்பம்

குறிப்பாக, கலெக்டர் அலுவலகம் - தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், பூங்கா பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்ட இடத்தில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கீழ்நோக்கி வாகனங்கள்; தாவரவியல் பூங்கா சாலையில் இருந்து வரும் வாகனங்கள்; கோத்தகிரி சந்திப்பில் வரும் வாகனங்கள் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நின்றதால் போலீசார் போக்குவரத்தை சீரமைக்க திணறினர். பயணிகள் கூறுகையில், ' ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் முன்பு இது போன்ற வாகன நெரிசல் ஏற்பட்டதில்லை. இந்த குறிப்பிட்ட பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு போலீசார் உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில் வரும் இரண்டு மாதம் குறிப்பிட்ட பகுதியில் பெரும் நெருக்கடி ஏற்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !