உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தொடரும் தாமதம்; வாடிய முகங்களுடன் பூங்கா பணிகளை செய்ய வேண்டிய நிர்பந்தம்

பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தொடரும் தாமதம்; வாடிய முகங்களுடன் பூங்கா பணிகளை செய்ய வேண்டிய நிர்பந்தம்

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையில் பணியாற்றும் நிரந்தர பண்ணை பணியாளர்களுக்கு, அரசு உத்தரவுபடி குறித்த நேரத்தில் சம்பளம் வழங்காததால், குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறையின் கீழ், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ்பூங்கா, ரோஜாபூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் கல்லார் பழப்பண்ணைகள், தும்மனட்டி, நஞ்சநாடு, தேவாலா தோட்டக்கலை பண்ணைகள், குன்னுார் பழவியல் நிலையம், தேயிலை பூங்கா ஆகியவை உள்ளன. இந்த துறையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி பணியாளர்களை கடந்த, 2007ல், அரசு ஆணையின்படி பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது. நிரந்தர பண்ணை பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களின் ஊதியத்திலிருந்து மாதந்தோறும் குடும்ப நலநிதி, 110 ரூபாய், இறப்பு சேமநலநிதி, 70 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பண்ணை மற்றும் பூங்காக்களில் பணிபுரியும் பணியாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் இருப் பவர்களுக்கு வழங்க வேண்டிய குடும்ப நலநிதி வழங்குவதில்லை. மேலும், வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வில் சென்றாலும், பணியாளர்களுக்கு ஓய்வுக்கொடை எதுவும் வழங்குவதில்லை. இதனால், கடைநிலையில் பணியாற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தோட்டக்கலை பண்ணை பணியாளர்கள் கூறுகையில், 'குடும்ப நலநிதி கடந்த, 2022 வரை யிலும் வழங்கிய துறையினர், தற்போது வழங்க மறுக்கின்றனர். மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளமும் தாமதமாக வழங்குகின்றனர். கடந்த மாதத்திற்கான சம்பளம், 8ம் தேதி முடிந்தும் வழங்காமல் உள்ளனர். இதனால், வாங்கிய பல்வேறு கடன்கள் குறிப்பிட்ட காலத்தில் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மாத சம்பளத்தை முதல் தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கூறுகையில்,'' தொழிலாளர்களுக்கான சம்பள தொகை ஓரிரு நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை