கவுன்சிலர் மகன் தற்கொலை உறவினர்கள் போராட்டம்
குன்னுார்:குன்னுார் அ.தி.மு.க., கவுன்சிலர் மகன் தற்கொலை செய்து கொண்டார். நீலகிரி மாவட்டம், குன்னுார் அட்டடியை சேர்ந்தவர் குருமூர்த்தி; அ.தி.மு.க., கவுன்சிலர். இவரது மகன் ராஜேஷ் கண்ணா, 17; தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். ஆக., 31ல் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இவர், கோவை தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இவரது தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை கோரி, அப்பர் குன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், உறவினர்கள், பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் நேற்று திரண்டனர். உறவினர்கள் கூறுகையில், 'ராஜேஷ் கண்ணாவுக்கு ஜிம்மில் கொடுத்த ஸ்டீராய்டு புரோட்டின் பவுடர் காரணமாக, உடலில் அலர்ஜி ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார். 'ஜிம் உரிமையாளர் தான், தற்கொலைக்கு காரணம்' என, கடிதம் எழுதி வைத்துள்ளார்' என்றார். டி.எஸ்.பி., ரவி கூறுகையில், ''இந்த புரோட்டின் எடுத்த மற்றவர்களுக்கும் பாதிப்பு உள்ளதா அல்லது இவர் கூடுதலாக எடுத்தாரா என்பது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.