கூடலுார் அருகே சேதமடைந்து வரும் சாலை: சீரமைத்தால் நிம்மதி
கூடலுார் ; 'கூடலுார் அருகே சேதமடைந்துள்ள செம்பாலா -முதல் மைல் சாலையை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் செம்பாலா பகுதியில் இருந்து பிரிந்து செல்லும் சாலை, ஈட்டி மூலா சாலை தேவர்சோலை முதல் மைல் சாலையுடன் இணைகிறது. 4 கி.மீ., துாரம் உள்ள சாலையை, ஈட்டிமூலா, திருவள்ளுவர் நகர், ஆனைசெத்த கொல்லி பகுதி மக்களும், வன ஊழியர்கள் குடியிருப்பில் வசிக்கும் வன ஊழியர்கள், போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், கேரள மாநிலம், மலப்புரத்தில் இருந்து, கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரிக்கும் செல்ல, கேரளா மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த குறுகிய சாலை, பல இடங்களில் சேதமடைந்து, சீரமைக்காமல் உள்ளதால், வாகன போக்குவரத்துக்கும் மக்கள் நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது.மேலும், இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், மக்களின் அவசர தேவைக்கு கூட வாகனங்கள் வந்து செல்ல தயக்கம் கட்டி வருகின்றனர்.தொடர்ந்து, சேதமடைந்து வரும் சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்துக்கு இந்த சாலையைத் தவிர, வேறு வழி இல்லை. எனவே, சேதமடைந்து வரும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.