உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோர வனத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆபத்து

சாலையோர வனத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆபத்து

கூடலுார் ;கூடலுார் கோழிக்கோடு சாலை, கோழிப்பாலம் அருகே, சாலையோர வனப்பகுதியில் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் எடுத்து வருவதை தடுக்க, கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில், தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, வாகனங்களில், பிளாஸ்டிக் சோதனை செய்த பின் அனுமதித்து வருகின்றனர். எனினும், பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக தடுக்க முடியவில்லை.இந்நிலையில், சிலர் தங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். நகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றினாலும், தடுக்க முடியவில்லை.கோழிக்கோடு சாலை, கோழிப்பாலம் கல்லுாரி அருகே வளைவான சாலையை ஒட்டிய, வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால், வனச்சுழல் பாதிக்கப்படுவதுடன், அதனை ஒட்டிய பாண்டியாறு - -புன்னம்புழா ஆறு மாசுபடும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க வலியுறுத்தியுள்ளனர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ' சாலையோர வனப்பகுதிகளில் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் ஆபத்து உள்ளது. இவைகள் அகற்றுவதுடன், அப்பகுதியில், குப்பை கழிவுகள் வீசி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !